
ஈழத்தை பொறுத்தவரை சினிமா தயாரிப்பிற்கான வளங்கள் தற்போது குறைவு என்றே சொல்லலாம். அதுபோல சினிமாவிற்கான ஊக்குவிப்பும் மிகக் குறைவு. இங்கு இசைத்துறைக்கு இருக்கும் ஊடகங்களின் ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு சினிமாத்துறைக்கு துண்டற இல்லை என்பதுதான் உண்மை. மிகவும் தரமான பல குறும்படங்கள் ஈழத்தில் இருந்து வந்த போதும் முழு நீள சினிமாவிற்கான முயற்ச்சி எடுவும் இடம்பெறவில்லை.
மேலே நான் வளம் என்று குறிப்பிட்டதில் முக்கியமானது தயாரிப்பு. முன்னைய காலங்களை போல் அல்லாது இப்போது குறிப்பிட்டளவு பெரிய தொகையை சினிமாவிற்கு முதலிடவேண்டியுள்ளது. ஆனால் ஈழத்தை பொறுத்தவரை அந்தளவு தொகையை முதலிட யாரும் முன்வரவில்லை. புலத்திலிருந்து சிலர் இதற்கு விரும்பினாலும் அவர்களிடம் ஒரு மிகப்பெரிய தயக்கம் இருக்கிறது. காரணம் ஈழத்தில் இதுவரை எந்த முயற்சிகள் மேற்கொள்ள முடியாததும் இந்திய சினிமாக்களுக்கு நிகரான ஒரு படைப்பை ஈழத்தவர்களால் கொடுக்கமுடியுமா என்பதுவுமே.
அடுத்தது தொழில்நுட்ப வளங்கள் யாவுமே வெளியிலிருந்தே பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. உதாரணமான 35mm கமரா ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு கொழும்புவரை செல்லவேண்டியுள்ளது. இதற்கே இந்த நிலை என்றால் மற்றவை பற்றி சொல்லத்தேவையில்லை. இதனால் முதல் முயற்சிக்கான தயாரிப்பு செலவு மிகவும் அதிகரிக்கிறது. அத்துடன் தொழில்நுட்ப கருவிகளை கையாளும் திறன் ஒப்பீட்டளவில் மிக மிக குறைவாகவே உள்ளது. ஊடகங்களின் ஆதரவை பொறுத்தவரை ஏனைய இடங்களை விட இலங்கையில் இசைத்துறைக்கு பாரியளவு ஆதரவும், ஊக்கமும் உள்ளது. அதே நேரம் சினிமாத்துறைக்கு எந்தவித ஆதரவையும் ஊடகங்கள் தற்போது வழங்கவில்லை என்பதே என் கருத்து. கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பனைமரக்காடுகள் என்ற திரைப்படம் பற்றிய தகவல்களை எந்த ஊடகத்திலும் காணமுடியவில்லை. ஈழத்தில் ஏராளமான கலைஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிப்போயுள்ளார்கள். அவர்களை ஒன்றினைத்து ஓர் உருப்படியான முயற்சியை மேற்கொள்ளும் பொறுப்பு ஊடகங்களின் கையில் உள்ளது.
இவற்றைவிட அடிப்படையான சில பிரச்சினைகள் ஆரம்பமட்டத்திலேயே உள்ளன. பல திறமையான கலைஞர்கள் இருந்த போதும் யாரும் சினிமா என்ற வட்டத்துக்குள் வரவில்லை. அவர்களை இனங்கண்டு ஒன்றுசேர்த்து, பயிற்சியளித்து பயன்படுத்தினால் நிச்சயமாக நல்லதொரு பயனை பெறலாம். அத்துடன் இப்போது முன்னரைவிட ஈழத்து ரசிகர்களுக்கு இந்திய இந்திய சினிமா மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆகவே திடீரென ஈழத்தில் இருந்து வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்களின் கவனத்தை ஈழத்து சினிமா மீது திருப்புவதன் மூலம் அவர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினால் மட்டுமே ஓரளவு வெற்றிபெற முடியும். இதற்கான பொறுப்பு இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளின் கைகளிலேயே உள்ளது. ஈழத்திலிருந்து ஏராளமான தரமான குறும்படங்கள் பல வெளிவந்துள்ளன. ஆனால் அவை ஒருகுறுகிய வட்டத்திற்குள்ளேயே அடங்கிப்போய்விட்டன. அவற்றை வெளிக்கொணர்ந்து மக்களிடத்தில் சேர்ப்பதன் மூலம் சினிமாவிற்கான அடிப்படைகளை கட்டியமைக்க முடியும்
ஆகவே ஈழத்து சினிமா ஆர்வலர்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் இந்த விடயத்தில் அதீத கவனமெடுத்து செயலாற்றுவதன் மூலமே சரிந்துபோயுள்ள எமது திரைப்படத்துறையை வளர்த்தெடுக்க முடியும். விரைவில் வெளிவரவுள்ள பனைமரக்காடுகள் திரைப்படத்த்க்கு எமது ஒருமித்த ஆதரவை வழங்குவதன் மூலம் எம் திரைப்பட வரலாற்றை மீண்டும் ஒருமுறை ஆரம்பித்து வைப்போம்
குறிப்பு : ஈழத்து திரைப்பட வரலாறுகள் சரியான முறையில் ஆவணப்படுத்தப்படவில்லை. அதனால் பல தகவல்களைபெற்றுக்கொள்ள முடியவில்லை. திரைப்பட வரலாறு பற்றிய தகவல்கள் விடுபட்டு போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்
செய்திகள் பல இடங்களில் இருந்து பெறபட்டது by-Logakanthan