இயக்குனர் கவி மாறனுடன் ஒரு நேர் கானல்

வரைமுறைகளுக்கு உட்பட்டே எங்களால் இங்கிருந்து சினிமா எடுக்க முடியும் – நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் கவிமாறன் பேட்டி

ல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு யாழ் மண்ணில் ஒரு முழு நீள திரைப்படத்தை நண்பர்களின் துணையோடு தனியாளாக நின்று கொடுத்து ஜெயித்திருக்கும் கலைஞன் கவிமாறான் சிவாவை இந்தவாரம் தமிழ்த்தந்தி சினிமா பகுதிக்காக நேர்கண்டோம். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்முக ஆற்றலோடு களமிறங்கியிருக்கும் இவரை, புத்துயிர் பெற்றிருக்கும் ஈழத்து சினிமாவின் முதன் வெற்றிகரமான ஹீரோ என்று கூறினாலும் மிகையில்லை.

நேர்கண்டவர் : கானா வரோ 

கேள்வி : உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் ஒன்றைத் தாருங்கள்? 
பதில் : எனது சொந்த இடம் யாழ்ப்பாணம் - உரும்பிராய். அப்பா சிவஞானம். அம்மா கமலா. எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. நான் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் எனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் படித்துப் பட்டதாரியாகிருக்கின்றேன்.

கேள்வி : சினிமாத்துறைக்குள் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது? 
பதில் : சிறு வயது முதலே சினிமாவில் ஒரு இனம் புரியாத ஈடுபாடு. நடிக்க வேண்டும், இயக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறையவே இருந்தது. அதற்கான வாய்ப்புக்கள் எம் மண்ணில் குறைவு. கொழும்பில், சிங்கள இயக்குனர்களிடம் கூட வாய்ப்புக் கேட்டிருப்பேன். எதுவும், நிறைவேறாமல் போகவே முயற்சியைக் கைவிடாது ஆர்வக்கோளாறு காரணமாக நானே களத்தில் இறங்கிவிட்டேன். நம்பிக்கையுடன், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் நானாகவே எனக்கான வாய்ப்புக்களை உருவாக்கி இன்று இந்தளவு தூரம் வந்திருக்கின்றேன்.

கேள்வி : உங்களது முதல் குறும்பட அனுபவம் எப்படி? 
பதில் : நண்பன் ஒருவன் நல்ல கதை வைத்திருந்தான். என்னை நாயகனாக வைத்து ‘கரும்பலகை’ என்ற குறும்படத்தை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குறும்படப்போட்டி ஒன்றிற்காக இயக்கி அனுப்பினான். சுமார் 40 குறும்படங்கள் வரை பங்குபெற்றிருந்த அந்தப்போட்டியில் மொத்தமாக வழங்கப்பட்ட 10 விருதுகளில் 3 விருதுகள் எங்களுக்கு கிடைத்தன. எனக்கு சிறந்த நடிகன் விருது கிடைத்தது.

கேள்வி : உங்களது முதல் முழு நீளத்திரைப்படமான “என்னுள் என்ன மாற்றமோ” பற்றிக் கூறுங்கள்?
பதில் : நான் அக்கடமியில் படித்துக் கொண்டிருக்கும் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என மிகுந்த ஆசைப்பட்டேன். நண்பர்களின் உதவியுடன் எந்தவொரு அனுபவமும் இல்லாமல் வெறும் நம்பிக்கையை மட்டும் கையில் வைத்துக் கொண்டு படவேலைகளைத் தொடங்கினோம். பண நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களைச் சந்தித்து இறுதியில் அந்தப் படத்தை தியேட்டரில் திரையிட்ட போது மிகுந்த சந்தோஷம் அடைந்தோம். இப்பொழுது அந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் போது எனக்கே பல குறைகள் தென்படுகின்றன. அது முதல்படம் என்பதால், குறைகளைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இனி வரும் படங்களில் விட்ட குறைகளை சரி செய்வேன். இந்தப்படம் யாழ்ப்பாணத்தில் 5 தியேட்டர்களில் காட்சிப்படுத்தப்பட்டது. பிரான்ஸ், சுவிஸிலும் காட்சிப்படுத்தப்பட்டது. லண்டன், கனடாவில் திரையிடப்படுவதற்கான முயற்சிகள் நடந்தும் இறுதியில் சில பல காரணங்களால் கைகூடாமல் போய்விட்டது.


கேள்வி : இதுவரை பணியாற்றிய படங்கள், குறும்படங்கள், பாடல்கள் பற்றி?
பதில் : கரும்பலகை என்ற குறும்படத்தில் நடித்தேன். என்னுள் என்ன மாற்றமோ திரைப்படம். தவிர, தேன் சிந்தும் பூக்கள் மற்றும் அம்மா பாடலில் நடித்தேன். தற்போது ‘ஏ புள்ளை’ (டைட்டில் மாறலாம்) என்ற பாடலை நடித்து இயக்குகிறேன். நெஞ்சுக்குள்ளே இந்த வாரம் ரிஸீஸாகும் மற்றொரு படம்.

கேள்வி : ஈழத்திரைப்படத்துறை வளர்ச்சியில் தடையாக இருக்கும் காரணிகள் எவை? 
பதில் : தென்னிந்திய சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இலங்கைத் தமிழ் ரசிகர்கள் இன்னமும் முழுமையாக எங்கள் படைப்புக்களின் மீது கொடுக்கிறார்கள் இல்லை. அதற்கேற்றால் போல் சிலர் அரைகுறையாக தரமில்லாத குறும்படங்களை கொடுத்துவிடுகிறார்கள். சினிமாவை சினிமாவாக செய்ய வேண்டும். விளையாட்டுத்தனங்களுக்கு இடமிருக்கக் கூடாது. படம் செய்ய நினைப்பவர்களுக்கு சினிமா பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். மற்றவர்களிடம் கேட்டு படிக்க வேண்டிய அவசியம் இல்லை. இணையங்கள் வாயிலாகவே நிறைய சினிமா தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடியும். எங்களிடமிருந்து வரும் தரமான படைப்புக்களை மக்கள் நிச்சயம் ஏற்பார்கள். அரசாங்கமோ அல்லது வட மாகாண சபையே ஈழத்து திரைப்படத்துறைக்கு நிச்சயம் உதவ வேண்டும். எங்கள் சினிமாக்களுக்கும் தியேட்டர்கள் இடம்கொடுக்க வேண்டும். படங்கள் தியேட்டர்களுக்கு வந்தால், ரசிகர்கள் நிச்சயம் சென்று பார்ப்பார்கள். எல்லோர் ஒத்துழைப்பும் இருந்தால் குறுகிய காலத்தில் ஈழத்து சினிமாவை உலகத்தரத்தில் கொண்டு வரமுடியும்.

கேள்வி : ஈழத்து குறும்படங்கள், திரைப்படங்களில் பயன்படுத்தும் மொழி வழக்கு பற்றி அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. இது பற்றிய உங்கள் கருத்து என்ன? 
பதில் : யாழ்ப்பாணப்படம் என்றதும் எமது மொழி வழக்கை நக்கலாகக் கதைக்கிறார்கள். தென்னிந்திய திரைப்படங்களிலும் ஈழத்து மொழி வழக்கை காமெடியாகவே பார்க்கிறார்கள். உண்மையில் இலங்கையில் எவரும் அப்படிக் கதைப்பதில்லை என்று எல்லோருக்கும் தெரியும். நாங்கள் சாதாரணமாக பேசும் மொழியை திரைப்படத்திலும் பேசினாலே போதுமானது. ஆனால், டப்பிங்கிற்காக மைக் முன்னால் வந்தவுடன், செயற்கைத் தமிழ் எங்களுடன் ஒட்டிக்கொள்கிறது. இதனால், எமது மொழியையே கொஞ்சம் இழுத்துக் கதைத்து காமெடியாக்கிவிடுகின்றோம். இது நாங்கள் செய்யும் தவறு தான். போதிய அனுபவமின்மை இந்தத் தவறுக்கு காரணமாக இருக்கலாம். அனைவருக்கும் விளங்கக்கூடிய வகையில் பொதுவான சினிமாத்தமிழில் நாங்கள் படங்களை எடுத்தால் போதுமானது.


கேள்வி : வெளியீட்டுக்குத் தயாராகும் நெஞ்சுக்குள்ளே படம் பற்றி? 
பதில் : இசைப்பிரியன் அண்ணாவிற்காக இந்தப்படத்தை நடித்து, இயக்குகின்றேன். காதலர் தின வெளியீட்டுக்;காக வேகமாக தயாராகிவந்த படம் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக கொஞ்சம் தாமதமாகிவிட்டது. மண்வாசனை என்றில்லாமல் கலர்புள் காதல் படமாக எடுக்கப்பட்டிருக்கின்றது. எதிர்பார்த்ததை விட படம் நன்றாக வந்திருக்கின்றது.

கேள்வி : கனவுப்படம் என்று ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா? 
பதில் : யாழ்ப்பாண மண் வாசனையுடன் ஒரு கதை இருக்கின்றது. நான் நினைத்த கதையே அப்படியே திரையில் வெளிக்கொண்டு வந்தால் வெற்றி நிச்சயம். அதற்கு தகுந்த தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். நிச்சயம் என்றோ ஒருநாள் நானாவது அந்தப்படத்தை தயாரித்து இயக்குவேன்.
கேள்வி : ஈழத்திரைப்பட முன்னோடிகள் / சினிமா அனுபவம் வாய்ந்தவர்கள் உங்களை எவ்வாறு அணுகுகின்றார்கள்? அவர்களிடமிருந்தான விமர்சனங்கள் எம்மாதிரி கிடைக்கின்றன? 
பதில் : பலரும் ஆதரவு – உற்சாகம் தந்தாலும், ஒரு சிலர் எங்களை முடக்குவதிலேயே குறியாக இருக்கின்றார்கள். அதற்கான காரணம் தான் என்னவென்று புரியவில்லை. எமது முயற்சியைத் தடுக்கும் விதமாக அவர்களது எதிர்க்கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. சிலவேளைகளில், தாங்கள் நினைத்து வைத்திருக்கும் ஈழத்து சினிமா என்ற கனவை நாங்கள் (புதியவர்கள்) தகர்க்கின்றோம் என்ற கோபமோ தெரியவில்லை! தங்கள் கருத்துக்களை எங்கள் மீது திணிக்கின்றார்கள். சுதந்திரமாக படம் செய்யவே நான் விரும்புகின்றேன். நல்ல படைப்புக்களைக் கொடுக்க வேண்டும் என்ற அவா மட்டுமே என்னிடம் இருக்கின்றது. வெளிநாட்டில் இருக்கும் அநேகர் உற்சாகப்படுத்துகின்றனர். எனது படம் வெளிநாட்டில் திரையிட்ட போது கூட சில விமர்சனங்களைச் சந்தித்தது. நாங்கள் இலங்கையிலிருந்து படம் செய்கின்றவர்கள். சில வரைமுறைகளுக்கு உட்பட்டே எங்களால் சினிமா எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி : புதிதாக ஈழத்தில் இருந்து கிளம்பியிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கிடையே ஒற்றுமை இல்லாத தன்மை காணப்படுகின்றதே! எல்லோரும் சேர்ந்தால் பெருமெடுப்பில் சினிமாவைப் படைக்கலாமே? 
பதில் : ஒற்றுமை இல்லை என்ற கூற்றை ஏற்றுக்கொள்கின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். சிலர் படத்தின் மூலம் ஏதாவது செய்தியைச் சொல்ல ஆசைப்படுகிறார்கள். நான், தரமான இயன்றளவு பிரமாண்டமான சினிமாவை கொடுப்பதற்கு ஆசைப்படுகின்றேன். வௌ;வேறு நோக்கத்திற்காக படம் செய்பவர்கள் சேர்ந்து பணியாற்றுவது சிரமம்.

கேள்வி : யாருக்காவது நன்றி சொல்ல ஆசைப்படுகிறீர்களா? 
பதில் : சமூக வலைத்தளங்களில் இருக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். எந்தவொரு இலாபமும் இல்லாமல் எனக்காகவே இருக்கும் என் நண்பர்கள். அவர்கள் உதவியால் தான் இவ்வளவு தூரம் வளர்ந்தேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்யும் புலம்பெயர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கின்றேன். முக்கியமாக உங்களுக்கும் (தமிழ்த்தந்தி) எனது நன்றிகள்.

கேள்வி : நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 
பதில் : எங்களைப் போல இன்னும் நிறையப்பேர் இந்த சினிமாத்துறைக்கு வரணும். குறும்படம் செய்யுறவங்கள் எல்லாம் முயற்சி செய்து முழு நீள திரைப்படங்கள் எடுக்கணும். என்னைப் பொறுத்தவரை குறும்படத்திற்கும் - பெரும்படத்திற்கும் உழைப்பு ஒன்று தான். நாட்களும், செலவும் மட்டுமே அதிகம். புதியவர்கள் தரமான படங்கள் எடுக்க வேண்டும். பல குறும்படப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும். பல தயாரிப்பாளர்கள் முன் வந்து படங்களைத் தயாரிக்க வேண்டும்.

நன்றி 
Varodayan Kanaganayagam


ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்   இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 


...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் 
................................................................................................................................

OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles